ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-
ஜோகூரில் இன்று அதிகாலை திருமணம் செய்யவிருந்ததாகக் கூறப்பட்ட ஒரு காதல் இணையினர், அதிகாலை 2 மணியளவில் ஓர் ஆடம்பரத் தங்கும் விடுதி அறையில் ஜோகூர் மாநில இஸ்லாமிய சமயத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் கதவைத் தட்டிய பிறகே அக்கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த பெண்ணின் சலனத்தைக் கண்ட அதிகாரிகள் அறைக்குள் நுழைந்து சோதனையிட்டனர். படுக்கையில் போர்வையால் போர்த்தப்பட்டுக் கிடந்த ஆணைக் கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் ஸினா எனப்படும் விபசாரத்திற்கான முன்னோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுச் சட்ட நடவடிக்கைக்காக ஷரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.








