Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ, கம்பார், தாப்பாவில் மீண்டும் கேட்ட மர்ம வெடிச் சத்தம்: பீதியில் மக்கள்
தற்போதைய செய்திகள்

ஈப்போ, கம்பார், தாப்பாவில் மீண்டும் கேட்ட மர்ம வெடிச் சத்தம்: பீதியில் மக்கள்

Share:

ஈப்போ, பிப்ரவரி.09-

ஈப்போ மற்றும் அதனைச் சுற்றியுள்ள கம்பார், தாப்பா, தெலுக் இந்தான் போன்ற மாவட்டங்களில் இன்று அதிகாலை வேளையில் மீண்டும் மர்மமான பலத்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 11.50 மணி முதல் இன்று அதிகாலை வரையிலான காலப்பகுதியில் இந்தச் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

கம்பாரைச் சேர்ந்த நூர் கலீசா என்ற பெண்மணி, இந்தச் சத்தம் தனது வீட்டின் கண்ணாடிக் கதவை அதிரச் செய்யும் அளவிற்கு வலிமையாக இருந்ததாகப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய பேராக் கனிம மற்றும் புவி அறிவியல் துறை இயக்குனர் Nizarulikram Abdul Rahim, இதுவரை அதிகாரப்பூர்வ புகார்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியாவுடன் இணைந்து முதற்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாகக் கூறினார்.

பாறைகளை வெடிக்கச் செய்யும் பணிகள் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. எனவே, நள்ளிரவில் கேட்ட இந்தச் சத்தத்திற்கும் இதற்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை.

வானிலை ஆய்வுத் துறையின் கருவிகளில் ஈப்போ அல்லது கம்பார் பகுதியில் எந்தவொரு நில அதிர்வுகளும் பதிவாகவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதியும் இதே போன்ற சத்தம் கேட்டது. மேலும், 2012, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளிலும் இது போன்ற விவரிக்க முடியாத சத்தங்கள் பதிவாகியுள்ளன. இவை குண்டு வெடிப்புச் சோதனைகளோ அல்லது ராணுவ விமானங்களின் Sonic boom சத்தமோ அல்ல என்று கனிம மற்றும் புவி அறிவியல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பேராக் மாநிலத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இது குறித்து போலீஸ் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பேரா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முஹமட் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Related News