கோத்தா பாரு, ஜனவரி.13-
சட்டவிரோத வட்டி முதலைகள் தொடர்பாக 100 பழைய வழக்குகளை மீண்டும் கையிலெடுத்து விசாரணை நடத்தியதே, தனக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல்களுக்குக் காரணமாக இருக்கலாம் என கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.
கடன் முதலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருந்த அவ்வழக்குகள், 'மேல் நடவடிக்கை தேவையில்லை' என வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் விசாரணை நடத்தத் தான் உத்தரவிட்டதாக முஹமட் யுசோஃப் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில், 72 வழக்குகள் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், அவ்வழக்குகளின் எண்ணிக்கையானது, 100 ஆக உயர்ந்ததாகவும் நேற்று கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முஹமட் யுசோஃப் தெரிவித்துள்ளார்.








