Jan 16, 2026
Thisaigal NewsYouTube
பாடாங் மெர்போக் மைதானம் மீண்டும் பொதுமக்களுக்காகத் திறப்பு
தற்போதைய செய்திகள்

பாடாங் மெர்போக் மைதானம் மீண்டும் பொதுமக்களுக்காகத் திறப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.16-

2022-ஆம் ஆண்டு வேலி அமைத்து மூடப்பட்ட கோலாலம்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடாங் மெர்போக் மைதானம், தற்போது மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 14-ஆம் தேதி முதல் மைதானத்தைச் சுற்றியிருந்த வேலிகளைக் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் அகற்றியுள்ளதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ அறிவித்தார்.

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், அப்போதைய பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது, அங்கு நடைபெற்ற ஒரு போராட்டத்தைத் தொடர்ந்து அந்த மைதானம் வேலி அமைத்து மூடப்பட்டது. மைதானத்தை மேம்படுத்துவதற்காகவே வேலி அமைக்கப்பட்டதாக அப்போது மாநகர் மன்றம் தெரிவித்திருந்தது.

மடானி அரசாங்கம் தவறுகளைச் சரி செய்து வருகிறது. அதன் தொடக்கமாக பாடாங் மெர்போக் மைதானத்தைப் பொதுமக்களிடமே மீண்டும் ஒப்படைக்கிறோம் என்று ஹான்னா இயோ இன்று மைதானத்தைப் பார்வையிட்ட போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபாமி ஃபாட்சீல், பொதுமக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காகக் குறைந்த செலவில் அல்லது கட்டணமில்லாத அதிகப்படியான திறந்தவெளி இடங்களை உருவாக்குவதை உறுதிச் செய்வோம் என்று கூறினார்.

மேலும், இந்த மைதானத்தில் பொதுமக்களுக்காகத் திரையிடல் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் அவர் ஆலோசனைக் கூறினார்.

மைதானத்தின் ஒரு பகுதி மட்டும் நிலத்தடி நீர்த் தேக்கக் குளம் அமைக்கும் பணிகளுக்காகத் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2027 மார்ச் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News