கோம்பாக், நவம்பர்.18-
இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரையோர ரயில் இருப்புப் பாதை நிர்மாணிக்கும் திட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த இணைப்பு இரும்புத் தூண்கள் சரிந்து கார் மீது விழுந்ததில் பெண் வாகனமோட்டி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.47 மணியளவில் பத்துகேவ்ஸ் அருகில் MRR2 சாலையில் கோம்பாக் அருகில் நிகழ்ந்தது. காரின் கூரையை அழுத்திக் கொண்டு கிடந்த இரும்புத் தூண்களை, தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் வருவதற்குள், பொதுமக்கள் அகற்றி, காரிலிருந்து பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.
Suzuki Swift காரில் பயணித்த பெண் காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளன.








