கோலாலம்பூர், பிப்ரவரி.21-
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர், Taman Shamelin-னில், சக வாகன ஓட்டுநரை விளக்குக் குழாயைக் காட்டி மிரட்டிய 30 வயது மதிக்கத்தக்க நபர், சுமார் ஆறு மாதக் காலத் தேடுதலுக்குப் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி மாலை 4.28 மணியளவில், தனது குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது ஒருவரின் காரை வழிமறித்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
செராஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ரொஸ்டி டாவுட் கூறுகையில், "சந்தேக நபர் திடீரெனப் புகுந்து காரை நிறுத்தியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பாதிக்கப்பட்டவர் அமைதியாகப் பேச முயன்ற போதும், அந்த நபர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு விளக்குக் குழாயைக் காட்டி மிரட்டியுள்ளார்," என்றார்.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் ஏற்கனவே 10 குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பது தெரிய வந்தது. இருப்பினும், அவரது சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை.
போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்ட ஒரு சிறிய புரிந்துணர்வின்மை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. பிப்ரவரி 11 முதல் 12 வரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அந்த நபர், பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று ஏசிபி ரொஸ்டி டாவுட் குறிப்பிட்டார்.








