புத்ராஜெயா, பிப்ரவரி.13-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி மீதான பங்குரிமை தொடர்பான புகார்களை விசாரிக்க ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தலைமையில் அமையவுள்ள இந்தப் பணிக்குழு, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விரிவாக ஆராய்ந்து அமைச்சரவையில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அஸாம் பாக்கி அரசு விதிமுறைகளை மீறி பங்குகளை வைத்திருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக அஸாம் பாக்கியைப் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அது குறித்து கூட்டத்தில் பேசப்படவில்லை என்றும், விசாரணை குறித்த முழுப் பொறுப்பும் தலைமைச் செயலாளர் மற்றும் சிறப்புப் பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஃபாமி விளக்கமளித்தார்
மறுபுறம், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அஸாம் பாக்கி, தான் பங்குகளை வாங்கியது வெளிப்படையானது என்றும், எந்தவொரு சட்டத்தையும் தான் மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது எந்த நிறுவனத்திலும் தனக்குப் பங்குகள் இல்லை என்பதையும், தனது வர்த்தகக் கணக்கு காலியாக இருப்பதையும் Bursa Malaysia பங்கு பரிவர்த்தனையின் மூலம் சரிபார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மீது அஸாம் பாக்கி சட்ட நடவடிக்கையையும் தொடங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்துப் பேசிய ஃபாமி, விசாரணைச் செயல்முறை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றார். விசாரணை முடிவடைந்ததும் அதன் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த விசாரணை ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








