புக்கிட் காயு ஹீத்தாம், மார்ச்.29-
நாட்டின் எல்லைப் பகுதிகளில் டீசலும் பெட்ரோலும் கடத்தப்படுவதைத் தடுக்கவும், Fleet Card எனும் மானிய அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவும் உள்நாட்டு வாணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) முடிவெடுத்துள்ளது. அண்மையில் புக்கிட் காயு ஹீத்தாம் பகுதியில் ஒரு லாரியில் சட்டத்திற்குப் புறம்பாக எரிபொருள் நிரப்பிய நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்லை வாயில்களில் வாகனச் சோதனைகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் அமலாக்கிப் பிரிவின் தலைமை இயக்குநர் ஷாம்சுல் நிஸாம் காலில் தெரிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சுமார் 32.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எரிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் சொத்தைத் திருடும் இத்தகைய செயல்களைத் தேசத் துரோகமாகக் கருதி கடும் தண்டனை வழங்கப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.








