பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.22-
பண்டார் உத்தாமா பள்ளியில் மாணவி யாப் ஷிங் ஸுயேனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 14 வயது மாணவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை, நீதிபதி அமீரா சரியாத்தி ஸைனால் முன்னிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, அதனை ஒப்புக் கொள்வதாக அம்மாணவர் தலையசைத்தார்.
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி காலை 9 மணியளவில், பள்ளியின் பெண்கள் கழிப்பறையில், 16 வயது மாணவியைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கொலை குற்றத்திற்காக, தண்டனைச் சட்டம் பிரிவு 302 -இன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குழந்தைகள் சட்டம் 2001 இன் படி, இவ்வழக்கு ஒரு மைனர் சம்பந்தப்பட்டது என்பதால், வழக்கு விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்டன.