கோலாலம்பூர் புடு மார்க்கெட்டில் எலித் தொல்லை இருப்பதைச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. முளைகட்டிய பயறு வகைகளுக்கு இடையே எலிகள் ஓடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட ஆய்வுகளில் புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கோலாலம்பூர் மாநகர மன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து சந்தையில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்படவுள்ளன. உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்படும் வளாகங்கள் 14 நாட்கள் வரை மூடப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், எலிகளால் உணவு மாசுபட்டு சல்மோனெல்லோசிஸ் (Salmonellosis) மற்றும் லெப்டொஸ்பிரோசிஸ் (leptospirosis) போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் உணவுப் பொருள்களை வாங்கும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.








