கோலாலம்பூர், ஜூலை.21-
மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நிக் அடாம்ஸ் நியமிக்கப்படுவது தொடர்பில் அந்த நாட்டிலிருந்து இன்னும் எந்தவொரு விண்ணப்பத்தையும் மலேசியா பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா, மலேசியாவுடன் செய்து கொள்ள முனைப்பு காட்டும் போதுதான் அது குறித்து வெளியுறவு அமைச்சும், அமைச்சரவையும் பரிசீலனை செய்யும் என்று முகமட் ஹசான் விளக்கினார்.
பாலஸ்தீன மக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படும் நிக் அடாம்ஸ், மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
இதற்கு மலேசியர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு தொடர்பில் முகமட் ஹசானிடம் கருத்து கேட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.








