புக்கிட் மெர்தாஜாம், ஜூலை.14-
சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவில் தன்னை ஒரு சந்தாதாரராகப் பதிவு செய்து கொண்டு, ஓராண்டு கூட ஆகவில்லை. இந்நிலையில் விபத்துக்குள்ளாகியிருக்கும் தமக்கு சொக்சோவிலிருந்து 13 ஆயிரம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை அனுகூலமாகக் கிடைத்து இருப்பது இல்லத்தரசி எஸ். விஜயலெட்சுமியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சொக்கோவின் சொந்தத் தொழில் பாதுகாப்புத் திட்டமான ஸ்கிம் கெசெலாமாத்தான் சோசியால் பெகெர்ஜாஆன் செண்டிரி வாயிலாக இப்படியொருத் தொகை தமக்குக் கிடைக்கும் என்பது தாம் எதிர்பார்க்காததாகும் என்று வியப்புடன் கூறுகிறார் 40 வயது விஜயலெட்சுமி.
தமது கணவருடன் விபத்துக்கு இலக்காகிய விஜயலெட்சுமிக்கு இடுப்பு மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
இந்த விபத்தினால் மூன்று மாதங்களாக வேலை செய்ய முடியாமல் விஜயலெட்சுமி வருமானத்தை இழந்தார்.
இது போன்ற விபத்துக்கு சொக்கோவிடம் இழப்பீடு கோர முடியும் என்று தங்கள் குடியிருப்புப் பகுதி நடவடிக்கைக் குழுவின் மூலம் தனது தாயாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே மேல் விபரங்களை அறிய சொக்சோ அலுவலகத்திற்குத் தாம் சென்றதாக விஜயலெட்சுமி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சொக்சோ ஏற்பாட்டில் பினாங்கு, செபராங் பிறை மாநகர் மன்றத்தில் நடைபெற்ற சொந்த தொழில் புரிபவர்களுக்கான சந்தாதாரர் பதிவில் மூவாயிரம் பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டனர். அவர்களில் விஜயலெட்சுமியும் ஒருவராவார் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
புக்கிட் மெர்தாஜாம், மாச்சாங் பூபோக்கில் உள்ள விஜயலெட்சுமியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ஸ்டீவன் சிம், சொக்சோ இழப்பீட்டுத் தொகைக்கானக் காசோலையை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
அங்காடி வியாபாரம் நடத்தி வந்த விஜயலெட்சுமியும், அவரின் குடும்பத்தினரும் தங்களின் ஜீவியத்திற்குக் கிடைத்து வந்த அன்றாட வருமானத்தை இழந்த நிலையில் அவர்களுக்குக் கைக்கொடுத்தது சொக்சோவின் ஸ்கிம் கெசெலாமாத்தான் சோசியால் பெகெர்ஜாஆன் செண்டிரி திட்டமாகும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.








