காஜாங், அக்டோபர்.10-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி பாதாளத்தில் விழுந்ததில் பதின்ம வயது இளைஞர் உட்பட இரு ஆடவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் கோலாலம்பூர் –சிரம்பான் நெடுஞ்சாலையில் காஜாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது. இதில் 23 வயது இளைஞரும், 16 வயது ஆடவரும் உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸையிட் ஹசான் தெரிவித்தார்.
காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட அவ்விரு ஆடவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். கடுமையான காயங்களுக்கு ஆளான 20 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவரும், ஒரு பெண்ணும் செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இரு நபர்களின் உடல்களையும் மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடியதாக அவர் மேலும் கூறினார்.








