கோத்தா கினபாலு, நவம்பர்.16-
மலேசிய ஊடகத்துறையில், 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்கள்கூட மாதந்தோறும் 2 ஆயிரத்திற்கும் குறைவாகச் சம்பளம் பெறுவது 'ஏற்கவே முடியாத அதிர்ச்சி' என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வேதனைத் தெரிவித்தார். இதனையடுத்து, ஊடக ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க, உள்ளூர் ஊடக நிறுவனங்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த அநீதிக்குத் தீர்வு காண, அவர் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீலுடன் உடனடியாக ஆலோசித்து, அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.
முன்னதாக, அரசு சார்ந்த நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக மூவாயிரத்து நூறு ரிங்கிட்டாக நிர்ணயித்ததைக் குறிப்பிட்ட பிரதமர், ஊடகத் துறையின் சம்பள உயர்வுக்கு உதவும் வகையில் சலுகைகள் வழங்குவது பற்றியும் தீவிரமாகக் கருத்தில் கொள்வதாக நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஊதியப் பிரச்சினை சபா மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், மலேசியாவின் அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.








