கோலாலம்பூர், டிசம்பர்.23-
கோலாலம்பூர் விமான நிலையம், முனையம் 1-இல் போக்குவரத்தைச் சீரமைப்பதற்காக, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்ட வாகன அணுகல் மேலாண்மை அமைப்பான VAMS-க்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
படிப்படியாக முழுமையான செயல்பாட்டிற்கு வரவுள்ள இந்த அமைப்பானது, கேஎல்ஐஏ-வில் பயணிகளை இறக்கி விடுதல் மற்றும் ஏற்றுதல் ஆகியவற்றில் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, வாகன நெரிசலையும் குறைக்கின்றது.
ஆண்டுக்கு 60 மில்லியனுக்கும் மேலான பயணிகள் பயன்படுத்தி வரும் கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு, ஒவ்வொரு நாளும் குறைந்தது 45 ஆயிரம் வாகனங்கள் வருகை புரிகின்றன.
பரபரப்பான நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் வாகனங்கள் வந்து போவதால், வாகன நெரிசல் ஏற்படுவதோடு, பயணிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள VAMS முறையின் மூலம், தற்போது வாகன ஓட்டுநர்கள், டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகின்றார்கள்.
பயணிகளை இறக்கவோ அல்லது ஏற்றவோ செய்த அடுத்த 10 நிமிடங்களில், அவர்கள் அங்கிருந்து புறப்படும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறும் வாகனமோட்டிகளுக்கு 100 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படுகின்றது.








