நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையில் திரேட்ஸ் சமூக ஊடகத்தில் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படும் நபர் குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி விசாரணை நடத்தி வருகின்றது.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் பதவி தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவு குறித்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபரிடம் லாபு போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்தப் பதிவின் பின்னணி மற்றும் உண்மை விவரங்களைக் கண்டறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் எம்சிஎம்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-இன் பிரிவு 233-ன் கீழ், தகவல் தொடர்பு வலையமைப்பு வசதிகள் அல்லது சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தடயவியல் ஆய்வுக்காக ஒரு கைப்பேசி மற்றும் இசிம் அட்டையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.








