முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை திரட்டும் நோக்கில், அம்னோ தொடங்கிய நிதி திரட்டும் நடவடிக்கை மூலம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
50 மில்லியன் ரிங்கிட் இலக்கை அடைய இன்னும் நிதி திரட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சாஹிட் ஹமீடி, மன்னிப்பு வாரியம் நிர்ணயித்த 50 மில்லியன் ரிங்கிட் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே நஜிப்பின் மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கும் ஏற்பாடு முழுமையாக நடைமுறைக்கு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம், நஜிப்பின் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை 6 ஆண்டுகளாகவும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை 50 மில்லியனாகவும் குறைத்தது.
மேலும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நஜிப் கடந்த 2022 -ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் காஜாங் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








