புத்ராஜெயா, ஜனவரி.06-
17 வயது பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக வாகனமோட்டும் பயிற்றுநர் ஒருவருக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று 8 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.
அதே வேளையில் அந்த நபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்த அப்பீல் நீதிமன்றம், அந்த நபர் இன்று முதல் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
75 வயது லிம் யோக் பின் என்ற அந்த முதியவர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் பகாங், பெந்தோங், ஜாலான் டேசா டாமாயில் இக்குற்றத்தைப் புரிந்ததற்காக ரவூப் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டு சிறை மற்றும் 3 பிரம்படித் தண்டனை விதிக்க உத்தரவிட்டது.
எனினும் அந்த நபரின் வயதை கருத்தில் கொண்டு பிரம்படித் தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும், சிறைத் தண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாகவும் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற டத்தோ ஹயாதூல் அக்மால் அப்துல் அஸிஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








