கோலா திரங்கானு, ஜூலை.19-
திரெங்கானுவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய காது, மூக்கு, தொண்டை நிபுணரான 42 வயது Mohd Safwan Mohd Soffian, தன்னிடம் சிகிச்சைக்காக வந்த 11 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் குற்றவாளி என கோலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் முதல் 2023-ஆம் ஆண்டு, ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், மருத்துவ ஆலோசனை அறையிலேயே நடந்ததாகக் கூறப்படும் 7 பாலியல் குற்றச்சாட்டுகளிலும், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7 பிரம்படி தண்டனையும், விதிக்கப்பட்டது.
மேலும், 2 ஆண்டுகள் காவல்துறை கண்காணிப்பிலும் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.








