கோலாலம்பூர், ஜூலை.23-
வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வை குறைப்பதற்கான முன்முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்தார்.
இது மடானி அரசாங்கத்தின் நான்காவது பட்ஜெட்டாகும். எந்தெந்த வகையில் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க முடியும், அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய மக்கள் பட்ஜெட்டாக 2026 ஆம் ஆண்டின், நாட்டின் தேசிய வரவு செலவுத் திட்டம் விளங்கிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், மக்களின் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாக இந்த சலுகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.
இவ்வாண்டு ஜுன் மாதம் ஒட்டு மொத்த பணவீக்க விகிதம் 11 விழுக்காட்டை மட்டுமே பதிவுச் செய்த போதிலும், மக்களின் வாழ்க்கைச் செலவு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் ஐந்து வகையான சலுகைகளைத் தாம் அறிவித்து இருப்பதாக குறிப்பிட்டார்.








