தெருநாய்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பேராக் மாநில அரசாங்கம் செயல்படுத்தி வரும் புதிய திட்டத்தை நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய சிறந்த முன்னுதாரணமாகக் கருத வேண்டும் என்று அம்மாநில வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒருங்கிணைந்த முயற்சியானது, விலங்குகள் நலனை பாதுகாப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு, கால்நடை சுகாதாரம் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பேராக் மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சி நிர்வாக ஆட்சிக்குழு உறுப்பினர் புவான் சான்ரியா ங் ஷய் சிங் தலைமையிலான குழுவினர் தம்மை நேரில் சந்தித்து, மாநிலத்தில் தெருநாய்கள் மற்றும் பூனைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை விளக்கியதாகவும் சான் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சிகள், பல்வேறு தரப்பினரிடையே மூலோபாய ரீதியிலான ஒத்துழைப்பை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








