கோலாலம்பூர், ஜூலை.16-
இம்மாதம் முதல் தேதியிலிருந்து எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரி அமலாக்கத்தைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்று அதன் அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்துள்ளார்.
பொறுப்பற்ற வர்த்தகர்கள், எஸ்எஸ்டி அமலாக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொருட்களின் விலையைக் கண்மூடித்தனமாக உயர்த்தி விடாமல் இருப்பதற்கு மக்கள் அதிகமாகக் கூடுகின்ற பகுதிகளை இலக்காகக் கொண்டு இந்தச் சோதனை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பொதுச் சந்தைகள், பேரங்காடிகள், வர்ததகத் தளங்கள் மற்றும் வணிக மையங்கள் ஆகியவற்றில் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் இந்தத் திடீர் சோதனையில் ஈடுபடுவர் என்று அவர் தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.








