நேற்று நடைபெற்ற ஜோகூர் மாநில பி.கே.ஆர் மாநாட்டில், கட்சியின் ஒற்றுமை மற்றும் விசுவாசம் குறித்துப் பேசிய அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீமுடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த ரமணன், "கட்சிக்கு வெளியே இருந்து வரும் தாக்குதல்களை விட, உள்ளிருந்தே கட்சியைச் சிதைப்பவர்களை ஒருபோதும் ஏற்க முடியாது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஹசான் கரீம், இது தனிநபர் விமர்சனத்திற்கான இடமல்ல என்று கூச்சலிட்டதால் மாநாடு போர்க்களமானது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ரமணன், "கட்சிக்கு விசுவாசமாக இருப்பதுதான் ஒரு தொண்டனின் முதல் கடமை. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறியும் வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள். கட்சிக்குள் இருந்து கொண்டே தலைமைத்துவத்தையும் கொள்கைகளையும் பொதுவெளியில் விமர்சிப்பது ஆக்கப்பூர்வமான அரசியல் அல்ல; அது துரோகத்திற்குச் சமமானது" எனச் சாடினார்.
கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களை நோக்கி ரமணன் எழுப்பிய இந்தக் கேள்விகள், மாநாட்டில் இருந்த பிரதிநிதிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.








