ஈப்போ, செப்டம்பர்.02-
பேரா மாநில அளவிலான தேசியத் தினக் கொண்டாட்டத்தின் போது, மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி திடீரென்று அணுகிய மாது ஒருவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மெய்க்காவலர்களின் கவனக்குறைவு நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்து ஆராய போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றைத் திறந்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 41 வயதுடைய அந்த மாது எவ்வாறு சுல்தானை மின்னல் வேகத்தில் அணுக முடிந்தது என்பது தொடர்பில் போலீஸ்காரர்கள் மற்றும் மெய்க்காவலர்களின் அலட்சியமும், கவனக்குறைவும் நடந்துள்ளதா? என்பதை அறிய தற்போது விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
சுல்தானைக் கட்டியணைக்க அந்தப் பெண் முயற்சித்த போதிலும் அவர் பாதுகாவலர்களால் உடனடியாகத் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இதில் மெய்க்காவலர்களின் கவனக்குறைவான அம்சங்கள் இருந்துள்ளனவா? என்பது தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








