கோலாலம்பூர், ஜனவரி.25-
தலைநகர் கோலாலம்பூரின் DUKE அதிவேக நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 14 முதல் 19 வயதுக்குட்பட்ட ஏராளமான பதின்ம வயது சிறுவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக மோட்டார் பந்தயங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வார இறுதிச் சோதனையில் 400-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டதில், உரிமம் இல்லாமை, சட்டத்திற்குப் புறம்பான மாற்றங்கள் செய்ததற்காக 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மொத்தம் 343 சம்மன்களும் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துக் காவற்படையின் தலைமை இயக்குநர் துணை ஆணையர் முஹமட் ஸாம்ஸூரி முஹமட் இசா தெரிவித்தார்.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதற்காக 6 பேர் கைது செய்யப்பட்ட வேளையில், போதைப்பொருள் சோதனையில் ஒருவர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிறுவர்கள் ஸ்தாப்பாக், கோம்பாக், செந்தூல், காஜாங், செராஸ் போன்ற பகுதிகளிலிருந்து பந்தயத்திற்காக நெடுஞ்சாலைக்கு வருவதால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைக் கண்காணிப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.








