கோலாலம்பூர், ஜனவரி.21-
2027-ஆம் ஆண்டு முதல், 6 வயதுடைய மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் முதலாம் ஆண்டில் பதிவு செய்யும் புதிய திட்டத்திற்குத் தயாராகும் வகையில், பாலர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப் போவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடங்கப்பட்ட 2026-2035-ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இந்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
ஆரம்பக் கல்விக்குத் தயாராக இருக்கும் பிள்ளைகளை முன்கூட்டியே முதலாம் ஆண்டில் சேர்க்க இது பெற்றோருக்கு வாய்ப்பளிக்கிறது.
இந்தத் திட்டம் அவசர கதியில் செயல்படுத்தப்படாது. நோயறிதல் பரிசோதனையின் மூலம் பிள்ளைகளின் தயார்நிலை மற்றும் தகுதியை உறுதிச் செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் விளக்கினார்.
ஆரம்பக் கல்வி 6 ஆண்டுகளும், இடைநிலைக் கல்வி 5 ஆண்டுகளும் என்ற தற்போதைய கல்வி அமைப்பு மாறாது. மாணவர்கள் தங்களின் மேல்நிலைக் கல்வியை 16 வயதில் நிறைவு செய்வார்கள் என்று ஃபாட்லீனா சீடேக் தெளிவுபடுத்தினார்.








