கோலாலம்பூர், டிசம்பர்.21-
பூடி95 திட்டத்தின் மூலம் வெறும் சில மாதங்களில் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் ரிங்கிட் மிச்சமாகியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மிக உற்சாகமாக அறிவித்துள்ளார். சுமார் 3.5 மில்லியன் வெளிநாட்டினரும், கடத்தல் கும்பல்களும் இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த மானியக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, உண்மையான மலேசியர்களுக்கு மட்டுமே பெட்ரோல் மானியம் கிடைப்பதை இந்தத் திட்டம் உறுதிச் செய்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாகப் பல அரசாங்கங்கள் விவாதித்தும் செயல்படுத்தத் துணியாத இந்தத் துணிச்சலான மாற்றத்தை, ‘மடானி’ அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாகப் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இவ்வாறு மிச்சப்படுத்தப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும், மக்களின் மருத்துவமனைகளை மேம்படுத்தவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும், ரஹ்மா பண உதவித் திட்டங்களுக்காகவும் மீண்டும் மக்களிடமே வந்து சேரும் என அவர் உறுதியளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மலேசியர்கள் மாதத்திற்கு 300 லிட்டர் வரையிலான RON95 பெட்ரோலை ஒரு லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் என்ற மானிய விலையில் பெற்றுப் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.








