கோலாலம்பூர், நவம்பர்.25-
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கன மழையில் வெள்ளம் சூழ்ந்துள்ள எட்டு மாநிலங்களில் 18 ஆயிரத்து 769 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.
இதில் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் மூவாயிரத்து 573 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 729 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டு, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 40 நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளதாக அந்த குழு கூறியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி நல்குவதற்கு மலேசிய சிறப்பு மீட்பு மற்றும் தேடுதல் படையான SMART, கிளந்தான் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
அதே வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 784 பேர், 21 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நிதியாக 750 குடும்பங்களுக்கு தலா 500 ரிங்கிட் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்துள்ளார்.








