கோலாலம்பூர், ஜனவரி.21-
வரும் 2027 கல்வி ஆண்டு முதல், ஆறு வயதில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், 16 வயதில் மேல்நிலைக் கல்வியை நிறைவுச் செய்வார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் முதல் வகுப்பிலேயே இருக்க மாட்டார்கள் என்றும், அதற்குப் பதிலாக ஆரம்பப் பள்ளியில் ஆறு ஆண்டுகளும், இடைநிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளும் கொண்ட தற்போதைய கல்வி அமைப்பையே பின்பற்றுவார்கள் என்றும் அமைச்சு விளக்கமளித்துள்ளது.
கல்வி அமைச்சின் கல்வி கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின்படி, மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் இடைநிலைக் கல்வி பயின்று, தங்களது 16 வயதில் மேல்நிலை இடைநிலைக் கல்வியை நிறைவுச் செய்வார்கள் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், முன்கூட்டியே சேர்ப்பது என்பது பெற்றோருக்கான ஒரு தன்னார்வ விருப்பமே தவிர, கட்டாயமில்லை என்றும், ஐந்து வயதில் பாலர் பள்ளியில் பயின்று, பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற குழந்தைகளின் தயார்நிலைகளைப் பொறுத்தே இது அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கற்றல் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக, 2027-ஆம் ஆண்டு பள்ளிப் பாடத்திட்டமானது, பாலர் பள்ளிக்குச் செல்லாத மாணவர்களையும் உள்ளடக்கி, அனைத்து மாணவர்களின் அறிவாற்றல் நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் அடிப்படைத் திறன்களைத் திறம்படக் கற்றுத் தேர்ச்சி பெற முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.








