மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய மலேசியா போன்ற தனது "நெருங்கிய நட்பு நாடுகளுடன்" ஈரான் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இது குறித்து மலேசியாவிலுள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் இந்த புதிய நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பதற்றம், எரிபொருள் விநியோகம் மற்றும் எண்ணெய் விலை உயர்வை பாதித்துள்ளது. இதைச் சமாளிக்க ஈரான் தூதரக ரீதியாகச் செயல்படுகிறது.
அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக இது குறித்துப் பேசினர். எரிபொருள் நெருக்கடியைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.
உலகின் 20 விழுக்காடு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக, தங்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்காத நாடுகளின் கப்பல்கள் ஈரானிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம் என ஈரான் உறுதி அளித்துள்ளது.








