பேராவில் கடந்த அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஓன்லைன் முதலீட்டு மோசடிக் கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என்று நம்பப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர்.
28 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் விசாரணைக்கு ஏதுவாக குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் மூன்று நாள் தடுத்து வைக்கப்படுவதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
100 வெள்ளி முதலீட்டில் மிக குறுகிய காலகட்டத்திலேயே கூடுதல் லாபத்தை பெறலாம் என்று சமூக வலைத்தளங்களில் மேற்கொண்ட விளம்பரத்தின் வாயிலாக இக்கும்பல் மக்களை ஏமாற்றியுள்ளதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ரம்லி முகமட் குறிப்பிட்டார்.








