ஷா ஆலாம், ஜூலை.18-
நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே, நீதி பரிபாலனத்தைத் தூய்மைப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸையிட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
டத்தோ வான் அஹ்மாட்டிற்கு 62 வயதாகிறது. நீதித்துறையில் அவர் எஞ்சியிருக்கக்கூடிய அடுத்த 4 ஆண்டுகளில் பலவீனமான நிலையில் உள்ள நீதி பரிபாலனத்திற்கு ஓர் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்று ஸையிட் குறிப்பிட்டார்.
டத்தோ வான் அஹ்மாட், சட்டத்தை நிலைநிறுத்துவது மட்டுமின்றி, நீதித்துறை அதிகாரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என்று முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஸையிட் வலியுறுத்தினார்.








