கோலாலம்பூர், ஜூலை.29-
சுற்றுப் பயணிகளை இலக்காகக் கொண்டு, அவர்களை மயக்கி, அவர்களே தங்கள் பணத்தை ஒப்படைக்கும் தந்திரத்தைக் கையாண்டு வந்ததாக நம்பப்படும் மாஜிக் கும்பலைச் சேர்ந்த ஐந்து அந்நிய நாட்டவர்களைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த ஜுலை 22 க்கும், 24 க்கும் இடைப்பட்ட தேதிகளில் கோலாலம்பூர் மாநகரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மத்தியக் கிழக்கை சேர்ந்த அந்த ஐந்து நபர்களும் பிடிபட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுல்ஸ்மி சுலைமான் தெரிவித்தார்.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளைக் கண்டதும், அவர்களின் நாட்டின் பணத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறி, அந்தப் பணத்தை ஆச்சரியமாகப் பார்ப்பதைப் போல் பாவனை செய்து, அந்தச் சுற்றுப் பயணிகள், தங்களை அறியாமலேயே ஒட்டு மொத்தப் பணத்தையும் அந்தக் கும்பலிடம் ஒப்படைக்கும் மாயஜால வேலையைக் கற்று வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி சுல்ஸ்மி குறிப்பிட்டார்.
முதல் சோதனை ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அதில் 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 16 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பன்னாட்டு பண நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டாவது சோதனை புக்கிட் பிந்தாங்கில் மேற்கொள்ளப்பட்டது. அதில் 20 வயது மதிக்கத்தக்க மேலும் ஓர் அந்நிய நாட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 360 ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஐவரும் புக்கிட் காயு ஹித்தாம் வாயிலாக மலேசியாவிற்குள் நுழைந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்நாட்டில் தங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட போது, தங்களின் கடப்பிதழ் காணாமல் போனதாக அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர் என்று ஏசிபி சுல்ஸ்மி தெரிவித்தார்.








