கோலாலம்பூர், அக்டோபர்.03-
மலேசியத் தொழிலாளர்களுக்கு வேலை இடங்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் 24 மணி நேர பாதுகாப்புச் சலுகையை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ள வேளையில் அந்த சலுகை அந்நியத் தொழிலாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்து வருகின்ற அந்நியத் தொழிலாளர்களுக்கும் அந்த சமூகவில் பாதுகாப்புச் சலுகை வழங்கப்படுவது நியாயமானதே என்று மலாயா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோ லிம் தை தெரிவித்தார்
அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினாலும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் விரிவாக்கம், பாகுபாடுயின்றி அனைவருக்கும் சீராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் பாதுகாப்புத் திட்டம் என்பது முதலாளிகள் அல்லது ஊழியர்களின் கூட்டு பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர்கள்தான் சொக்சோவிற்கான சாந்தாவைச் செலுத்துகின்றனர். இந்த சந்தாப் பணத்தை அரசாங்கம் ஏற்கவில்லை. இதனால் அரசாங்கத்திற்கு நிதி சிக்கல் ஏற்படப் போவதில்லை.
எனவே அந்நியத் தொழிலாளர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்புச் சலுகை என்பது அதற்கான சந்தாவைச் சம்பந்தப்பட்ட தொழிலாளியும், முதலாளியும் ஏற்கும் நிலை இருக்கும் பட்சத்தில், அந்த திட்டத்தை அந்நிய நாட்டவர்களுக்கும் விரிவுப்படுத்துவதில் பிரச்னை இருக்காது என்று கோ லிம் தை தெரிவித்தார்.








