Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு
தற்போதைய செய்திகள்

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

Share:

பினாங்கு, ஜெலுத்தோங் பகுதியில் உள்ள ஹியான் செங் கோங் ஆலயத்தில் கடந்த வாரம் ஒரு நபரைக் கொடூரமாகத் தாக்கி, பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கில், புதிதாகத் திருமணமான ஒருவர் உட்பட நான்கு நண்பர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.

34 வயது ஆர். நவீன் ராஜ், 31 வயது, எஸ். லோககுமரன், 38 வயது, எம். சஞ்சித் குமார், 30 வயது, கே. தினேஸ்குமார் ஆகிய நால்வரும் இன்று ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 21 அதிகாலை 4.25 மணியளவில், கைப்பேசி திருட்டு தொடர்பான தவறான புரிதலால், 31 வயதுடைய முகமது உமர் ஷெரீப் என்பவரை ஆயுதங்களுடன் ஒரு கும்பல் துரத்திச் சென்று இந்த ஆலயத்தில் வைத்துத் தாக்கியுள்ளது. இதனைத் தடுக்க வந்த 64 வயதுடைய ஆலயக் காவலரும் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரின் விரல்களும் துண்டிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், தப்பியோடிய மேலும் 4 சந்தேகநபர்களைப் போலீசார் தேடி வருவதாலும், இவர்களுக்குப் பிணை வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் லீ ஜுன் கியோங் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இர்வான் சுவைன்போன், நால்வருக்கும் பிணையை மறுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related News