கோலாலம்பூர், அக்டோபர்.17-
எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா ரொக்க நிதி உதவியின் நான்காம் கட்ட பணப் பட்டுவாடா, நாளை அக்டோபர் 18 ஆம் தேதி சனிக்கிழமை முதல் வழங்கப்படவிருக்கிறது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியச் சமூகத்தினர், வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதையொட்டி, எஸ்டிஆர் ரொக்க நிதி உதவி, முன்கூட்டியே வழங்கப்படுவதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்டிஆர் நிதி உதவி பெறுநர்களின் தகுதி வாரியாக வழங்கப்படும் இந்த நான்காம் கட்ட நிதி உதவியில் தலா 700 ரிங்கிட் வரை நிதி உதவியைப் பெறுவர். இதற்காக அரசாங்கம் 2 பில்லியன் அல்லது 200 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதி உதவியை அரசாங்கம் முன்கூட்டியே வழங்குவது மூலம் மலேசிய இந்திய சமூகத்தினர் தீபாவளித் திருநாளை மேலும் மகிழ்ச்சி பொங்க குதூகலமாகக் கொண்டாடுவர்கள் என்று அரசாங்கம் நம்புவதாக அந்த அறிக்கையில் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








