கூலிம், நவம்பர்.22-
கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகம் 2026 ஆம் ஆண்டிற்கான வீட்டு வரி கட்டணத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கும், கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமாட் சனூசி முகமட் நூருக்கும் தொடர்ப்பு இல்லை என்று கூலிம் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ ஹஜி ஹெல்மி யுசோஃப் விளக்கம் அளித்துள்ளார்.

நகராண்மைக்கழகங்கள் வீட்டு வரி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மந்திரி பெசார் எந்தவொரு பரிந்துரையும் முன்வைக்கவில்லை என்று டத்தோ ஹெல்மி யுசோஃப் தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு, கூலிம் மாவட்டத்தில் வீட்டு வரியின் கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரைக்கு பல காரணங்களும், நோக்கங்களும் உள்ளன என்பதையும் அவர் விளக்கினார்.

கூலிம் மாவட்டத்தில் 240 குடியிருப்புப் பகுதிகளும் 1293 தொழில் துறை நிறுவனங்களும் உள்ளன.
இம்மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளிலிருந்து முக்கிய மேம்பாட்டுத் திட்டங்கள் வரைக்கும் அதிக அளவிலான மானியங்கள் தேவைப்படுக்கின்றன. அதில் குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளின் சாலைகளின் மேம்பாடுகள், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், மாதம் தோறும் குப்பைகள் அகற்றும் பணிகள் என இன்னும் பல நடவடிக்கைகள் கூலிம் நகராண்மைக் கழகத்தின் கீழ் உள்ளன.

கெடா மாநில அரசாங்கம் மானியங்கள் ஒதுக்கப்பட்டாலும் அனைத்துத் தேவைகளையும் முழுமையாக நிறைவு செய்வதற்கு அம்மானியங்கள் போதாது என்று டத்தோ ஹெல்மி குறிப்பிட்டார்.

நேற்று முந்தினம் கூலிம் இன் தங்கும் விடுதியில் கூலிம் மாவட்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் வீட்டு வரி கட்டண உயர்வு தொடர்பான விளக்கவுரை மற்றும் கலந்துரையாடலுக்கு தலைமையேற்று பேசுகையில் டத்தோ ஹெல்மி இதனைத் தெரிவித்தார்.

வீட்டு வரியானது அனைத்து வீட்டுகளுக்கும் ஒரே சீராக விதிக்கப்படாது. ஒவ்வொரு வீட்டின் கட்டுமான நிலைகளை அறிந்தப் பின்னரே வரிகள் நிர்ணிக்கப்படும் என்பதை குடியிருப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விளக்கினார்.

வீட்டு வரி உயர்வு தொடர்பாக எந்தவொரு சந்தேகமும் இருக்குமானால் குடியிருப்பாளர்கள் நவம்பர் 23 ஆம் தேதிக்குள் கூலிம் நகராண்மைக்கழகத்தின் அலுவலகத்தை நாடி விளக்கம் பெறலாம் என்று டத்தோ ஹெல்மி அறிவுறுத்தினார்.








