Feb 18, 2026
Thisaigal NewsYouTube
அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச் சம்பவங்கள்: உள்ளூர் சமூக ஆதரவு மையங்களை மேம்படுத்த அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி
தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச் சம்பவங்கள்: உள்ளூர் சமூக ஆதரவு மையங்களை மேம்படுத்த அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.18-

குவாந்தானில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் கொலை - தற்கொலைச் சம்பவம், நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது போன்ற மன உளைச்சலால் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், PSSS எனப்படும் உள்ளூர் சமூக ஆதரவு மையங்களின் பங்கை வலுப்படுத்த வேண்டும் என மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது மிகுந்த மனவேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள நான்சி, குடும்ப உறுப்பினர்களின் கொலை – தற்கொலை தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் குறைந்தது ஆறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று குவாந்தான் செராதிங் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீடு ஒன்றில் சடலமாகக் காணப்பட்டனர்.

கொலை – தற்கொலையாக வகைப்படுத்தியுள்ள பகாங் மாநில போலீசார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலையின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல், இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நான்சி தெரிவித்துள்ளார்.

இது போன்ற மன உளைச்சலால் பாதிக்கப்படும் குடும்பங்களைப் பாதுகாக்க PSSS மூலம் ஆலோசனை சேவைகளை இன்னும் பரவலாக விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நான்சி விவரித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் அக்டோபர் மாதம் முதல் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 33 வழக்குகள் PSSS மூலம் கையாளப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியதையும் நான்சி சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச்... | Thisaigal News