கோலாலம்பூர், டிசம்பர்.23-
இன்று டிசம்பர் 23 ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் பயணிகள் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மலேசிய விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏ உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் செக்-இன் செய்வது மற்றும் விமானத்தில் ஏறும் போர்டிங் நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்குதல் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டிருப்பதை உறுதிச் செய்த எம்ஏஎச்பி எனப்படும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், இந்தத் தாமதத்தைக் களைய விமான நிறுவனங்கள் உடனடியாகத் தங்களின் மாற்றுச் செயல்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்தி வருவதாகவும், பயணிகளுக்கு உதவ விமான நிலைய முனையங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் ஆன்லைனில் செக்-இன் செய்யுமாறும், விமான நிலையத்திற்கு சீக்கிரம் வருமாறும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், விமான நிலவரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகளை எம்ஏஎச்பி கேட்டுக் கொண்டது.
விமான நிலையங்களில் உள்ள சுய சேவை இயந்திரங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன என்றும், அவற்றைப் பயன்படுத்தி பயணிகள் போர்டிங் பாஸ் மற்றும் பேக்கேஜ் டேக்குகளைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








