Apr 19, 2026
Thisaigal NewsYouTube
இந்தியத் தொழில் முனைவர்களுக்கும், சமூகத்தினருக்கும் உதவ 220 மில்லியன் ரிங்கிட்  'MUDRA' (முட்ரா) பொருளாதார நிதித் திட்டம்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியத் தொழில் முனைவர்களுக்கும், சமூகத்தினருக்கும் உதவ 220 மில்லியன் ரிங்கிட் 'MUDRA' (முட்ரா) பொருளாதார நிதித் திட்டம்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவதற்காக, 220 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்பிலான 'முத்ரா' (MUDRA) எனப்படும் - Modal Usahawan dan Rangsangan Ekonomi India) எனும் பொருளாதார நிதித் திட்டத்தை தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் அறிவித்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 160 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு 60 மில்லியன் ரிங்கிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதித் திட்டங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

இந்த 'MUDRA' முன்முயற்சியானது அமைச்சின் கீழ் உள்ள ஐந்து முக்கிய ஏஜென்சிகளின் கீழ் பின்வருமாறு செயல்படுத்தப்படும் என்பதை அமைச்சர் விளக்கினார்.

1. TEKUN Nasional திட்டத்தின் கீழ் இந்தியச் சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான SPUMI – க்கு (ஸ்பூமி) 120 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

2. Bank Rakyat திட்டத்தின் கீழ் இந்திய தொழில்முனைவோர் நிதித் திட்டமான BRIEF-i (ஃபிரிப் -ஐ.) க்கு 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

3. SME Bank திட்டத்தின் கீழ் வணிக நிதித் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

4. Amanah Ikhtiar Malaysia திட்டத்தின் கீழ் இந்தியப் பெண் தொழில்முனைவோர் அதிகாரமளித்தல் திட்டமான பெண்- னுக்கு (PENN) 27 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

5. மலேசிய கூட்டுறவு ஆணையம் திட்டத்தின் கீழ் பக்தி மடானிக்கு 1 மில்லியன் ரிங்கிட் மற்றும் SKM சுழற்சி மூலதன நிதிக்கு 10 மில்லியன் ரிங்கிட் என - மொத்தம் 11 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு என அமைச்சர் ஸ்டீவன் லிம் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 31 வரை, இத்திட்டத்தின் கீழ் 33.48 மில்லியன் ரிங்கிட் நிதி அங்கீகரிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள 1,805 இந்தியத் தொழில்முனைவோர் இதன் மூலம் நேரடியாகப் பயனடைந்துள்ளனர் என்பதையும் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.

இது குறித்து மேலும் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம், "MUDRA (முட்ரா) என்பது ஒரு குறுகிய கால நிதி உதவி மட்டுமல்ல; இது உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் இந்தியச் சமூகத்தின் வணிகப் போட்டித்தன்மையை உயர்த்துவதற்கான ஒரு வியூக நடவடிக்கையாகும்," என்று குறிப்பிட்டார்.

மலேசியா மடானி கொள்கையின் கீழ், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தொழில்முனைவோர் சூழலை உருவாக்கத் தனது தலைமையிலான தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சு உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related News