புத்ராஜெயா, ஏப்ரல்.19-
மாணவர்களின் ஒழுக்கத்தையும் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள எம்ஆர்எஸ்எம் எனப்படும் 58 மாரா அறிவியல் இளையோர் கல்லூரிகளில் முழுநேர வார்டன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இரண்டு கல்லூரிகளில் நடத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாரா தலைவர் டத்தோ அஷ்ரஃப் டுசுகி தெரிவித்தார்.
இந்த வார்டன் பணிகளுக்காக ஆயுதப்படை, காவற்படை போன்ற சீருடைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் கடுமையான தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் மாணவர்களுக்கு வெறும் பாதுகாவலர்களாக மட்டுமின்றி சிறந்த வழிகாட்டிகளாகவும் செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள வார்டன்களுக்கும் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் சேவையும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.








