பந்திங், ஜூலை.13-
கடந்த ஜூலை 2 அன்று பாலி தீவு அருகே கவிழ்ந்த கேஎம்பி துனு பிரதாமா ஜெயா படகு விபத்தில் இதுவரை ஒரு மலேசியர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர் 55 வயதுடைய ஃபௌஸி அவாங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல் கிழக்கு ஜாவாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மற்ற மலேசியர்கள் குறித்த புதிய தகவல் எதுவும் இல்லை என்றாலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி இந்தோனேசிய அதிகாரிகளால் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 65 பயணிகளையும் 22 வாகனங்களையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.








