மஇகா தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் மனிதவள அமைச்சு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு சொத்துகளை அறிவிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வரும் திங்கட்கிழமை நோட்டீஸ் வழங்கவுள்ளது.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இதனை இன்று அறிவித்தார்.
சரவணக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நோட்டீஸைப் பெற்றுக் கொள்ள அவர்கள் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு நேரில் வரவுள்ளதாக அவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம் 36ஆவது பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்படுவதுடன், சொத்துகளை அறிவிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். அந்தக் கால அவகாசம் போதுமானதாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அப்துல் ஹலிம் அமான் தெரிவித்தார்.
நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரே சொத்து அறிவிப்புக்கான ஒரு மாத கால அவகாசம் தொடங்கும் என்றும், இது எஸ்பிஆர்எம் பின்பற்றும் வழக்கமான நடைமுறை என்றும் அவர் கூறினார்.
சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு திங்கட்கிழமை நோட்டீஸ் வழங்கப்படும். லண்டனில் கல்வி பயிலும் மற்றொரு பிள்ளைக்கு நவம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிறுவனத்துக்கு 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டை அங்கீகரித்தது தொடர்பாக சுமார் 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக சரவணன் மீது மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை சரவணன் மறுத்து, விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.








