பாலிங், நவம்பர்.21-
கெடா, பாலிங்கில் தீயில் சேதமுற்ற பள்ளியின் நிலையை மதிப்பீடு செய்வதற்கு பொதுப்பணித் துறையின் தொழில்நுட்பக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பள்ளியின் கட்டிட அமைப்பின் பாதுகாப்பு நிலை குறித்த பூர்வாங்க மதிப்பீட்டை நடத்துவதற்காக பொதுப்பணித் துறையின் தொழில்நுட்பக் குழு இன்று கெடா, பாலிங்கில் உள்ள அந்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வது பொதுப்பணி அமைச்சின் முன்னுரிமையாகும். எனவே சேதமுற்ற அந்தப் பள்ளிக் கட்டிட அமைப்பின் பாதுகாப்பு நிலை குறித்து அக்குழுவினர் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பர் என்று அலெக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இந்தத் தீச் சம்பவத்தைப் பொதுப்பணி அமைச்சு கடுமையாக கருதும் வேளையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அமைச்சர் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்று கெடா மாநிலத்தில் வார விடுறையாததால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், காலையில் ஏற்பட்ட தீ அந்த தேசியப்பள்ளியின் கூரையில் அடர்த்தியாகப் பரவி பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.








