நாட்டில் பருவமழை இடைக்கால மாற்றம் வரும் 9ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் இறுதி வரை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு தென்மேற்கு பருவமழை காலம் முடிவுக்கு வருகிறது.
இந்தக் காலத்தில் பல்வேறு திசைகளிலிருந்து வீசும் பலவீனமான காற்றால் இடியுடன் கூடிய மழை மேகங்கள் உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்தார்.
குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு மற்றும் உள்பகுதிகளிலும், சபா மற்றும் சரவாக்கின் மேற்குப் பகுதிகளிலும் பிற்பகல் மற்றும் தொடக்க இரவு நேரங்களில் குறுகிய நேரத்தில் கனமழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் திடீர் வெள்ளம், திடீர் நீர்ப்பெருக்கு, மரங்கள் சாய்தல் மற்றும் வலுவற்ற கட்டமைப்புகள் சேதமடையும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார். பருவமழை மாற்றத்தால் அண்டை நாடுகளில் இருந்து வரும் எல்லை தாண்டிய புகைமூட்டமும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டாக்டர் முஹமட் ஹிஷாம் தெரிவித்தார்.








