"முயற்சி இருந்தால் சன்வேயின் ஒரு சிறிய குடியிருப்பில் இருந்தும் நாசாவின் கட்டுப்பாட்டு அறை வரை செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மலேசிய இந்தியப்பெண் நந்தினி பழனிசாமி. மலேசிய இந்திய சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள நாசா (NASA) ஆய்வு மையத்தில் நடைபெற்ற உயர்மட்டத் தலைமைத்துவப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆசியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை நந்தினி படைத்துள்ளார்.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த நந்தினியின் ஆரம்பகால வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. அவரது தந்தை ஒரு லாரி ஓட்டுநர். சிலாங்கூர், சன்வேயில் உள்ள ஒரு சிறிய அடுக்குமாடி வீட்டில் வசித்த நந்தினி, கல்வியால் மட்டுமே தன் நிலையை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்பினார். பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியையும், பண்டார் சன்வே இடைநிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் தொடர்ந்தார்.
SPM தேர்வில் 10 A பெற்று அசத்திய இவர், மெட்ரிக்குலேஷன் கல்விக்கு பிறகு மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பெட்ரோலிய பொறியியல் பயில இடம் கிடைத்தது. பட்டப்படிப்புக்கு பிறகு லாபுவானில் ஒரு பன்னாட்டு எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது போர்ட் கிள்ளானில் ஒரு நிறுவனத்தில் திட்டமிடல் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். நாசாவின் அந்த இரண்டு வார கால உயர்மட்டத் தலைமைத்துவப் பயிற்சியைப் பற்றி நந்தினி திசைகளிடம் இவ்வாறு விவரித்தார். "
"இரண்டு வார காலப் பயிற்சியாக இருந்தாலும், உலகத்தரம் வாய்ந்த ஒரு விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 32 வயதுடைய நந்தினி பெற்றுள்ள அனுபவம் விலைமதிப்பற்றது. சன்வேயின் குறுகிய சந்துகளில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்தின் நுழைவாயில் வரை நந்தினி கடந்து வந்த பாதை, இலட்சியம் கொண்ட ஒவ்வொரு மலேசிய இளையவருக்கும் ஒரு பெரும் உத்வேகம். விடாமுயற்சியும் கல்வியும் ஒருவரை எத்தகைய உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்கு நந்தினியே வாழும் சாட்சி!"

















