தமது அமைச்சு அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை மீறி எந்த ஒரு செலவையும் செய்யவில்லை என புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக எந்த அமைச்சும் செலவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஒதுக்கீடு இல்லாத குறிப்பிட்ட சில அவசியமான செலவுகளை அமைச்சு மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக புறநகர் திட்டங்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் தாமதமாக வழங்கப்படுவதா ஸாஹிட் புகார் தெரிவித்திருந்தார். இதனால் சில ஒப்பந்ததாரர்கள் பணப்புழக்கப் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், சில நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கருவூல தலைமைச் செயலாளர் ஜோஹான் மாஹ்மூட் மெரிகான், புறநகர் சாலைத் திட்டங்களுக்கான இவ்வாண்டு ஒதுக்கீட்டில் பெரும்பகுதி ஏற்கெனவே செலவிடப்பட்டுவிட்டதால் பணம் செலுத்துவதில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக புறநகர் சாலைத் திட்டங்களில் அமைச்சு அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர ஒதுக்கீட்டை விட அதிகமாக செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








