சிரம்பானில் வாடகை வீடு ஒன்றில் இயங்கி வந்த போதைப்பொருள் தயாரிப்பு மையத்தை முற்றுகையிட்ட போலீசார், சுமார் 27.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 180 கிலோவுக்கும் அதிகமான எம்டிஎம்ஏ (MDMA) போதைப்பொருளை பறிமுதல் செய்து, மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலை முறியடித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, அக்கும்பலின் தலைவன் என நம்பப்படும் 52 வயது நபர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்வீட்டில் இருந்து 104.8 கிலோ எம்டிஎம்ஏ தூள், 64.4 கிலோ திரவ எம்டிஎம்ஏ , 7.9 கிலோ எம்டிஎம்ஏ மாத்திரைகள் மற்றும் 5.2 கிலோ எம்டிஎம்ஏ படிகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், அங்கு தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் 32 மற்றும் 35 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு ரிவால்வர் மற்றும் மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 4 லட்சத்து 4 ஆயிரம் முறை பயன்படுத்தக்கூடிய அளவிற்கு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








