கோலாலம்பூர், ஜூலை.21-
ஐந்து மாநிலங்களில் பழைய இரும்புகள் மற்றும் மின்-கழிவு உபரிகளைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அடையாளம் கண்டு வருகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தக் கும்பல் அரசாங்கத்திற்கு 950 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஏற்றுமதி வரி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக எஸ்பிஆர்எம் சிறப்புச் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமட் ஸம்ரி ஸைனுல் அபிடின் தெரிவித்தார்.
உள்நாட்டு வருமான வாரியம், அரச மலேசிய சுங்கத் துறை, மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களின் இரும்புக் கடைகள் தொடர்புடைய நிறுவனங்களின் நிதி ஆதாரங்களையும் எஸ்பிஆர்எம் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டு எஸ்பிஆ எம் சட்டம், 16 மற்றும் 18 ஆகிய பிரிவுகள் மற்றும் சட்டவிரோதப் பணம் மாற்றம் ஆகிய குற்றவியல் சட்டங்களின் கீழ் இந்த கடத்தல் விவகாரம் கையாளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே விசாரணைக்கு உதவுவதற்காக டத்தோஸ்ரீ அந்தஸ்தை கொண்ட தொழிலதிபர் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை, விசாரணைக்கு உதவ மொத்தம் 27 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இன்று வரை, எஸ்பிஆர்எம் 324 வங்கிக் கணக்குகளையும், நிறுவனங்களுக்குச் சொந்தமான 142 கணக்குகளையும், தனிநபர்களுக்குச் சொந்தமான 182 கணக்குகளையும் முடக்கியுள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 150 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 183 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








