கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
சட்டப் படிப்பு எவ்வாறு நடத்தப்படுகின்றது என்பதை அறிய, சட்டத்துறைத் தகுதி வாரியம், இங்கிலாந்திற்கு 6 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டதற்கான செலவு 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் (அரை மில்லியன்) மேல் என நாடாளுமன்றத்தில் இன்று கணக்குக் காட்டப்பட்டது.
மொத்தம் 515,125 ரிங்கிட் செலவான இப்பயணத்தின் நோக்கம், இங்கிலாந்தின் உயர்மட்ட சட்டப் பள்ளிகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளிடமிருந்து பாடங்களைப் பெற்று, உள்ளூரில் பொது வழக்கறிஞர் பாட நெறியை உருவாக்குவதே ஆகும் என சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்த அமைச்சர் அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.
“(செலவுகளில்) விமான டிக்கெட்டுகள், தங்குமிடம், லண்டனில் வாகன வாடகை, பிரதிநிதிகளுக்கான தினசரிச் செலவுகள், பொது உரையாடல் அமர்வின் போது உணவு மற்றும் நினைவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும்” என்று அஸாலினா நாடாளுமன்றத்தில் இன்று செனட்டர் ரோட்ரிக் வோங் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வப் பதிலளித்தார்.
மேலும் இப்பயணத்தில் ஒன்பது பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், அதில் வாரியத் தலைவர், நான்கு வாரிய உறுப்பினர்கள், செயலாளர், சிஎல்பி தேர்வு இயக்குநர் மற்றும் இரண்டு பணியாளர் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் அஸாலினா குறிப்பிட்டிருக்கிறார்.








